பாலக்காடு, : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற, திருச்சூர் பூரம் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 24ம் தேதி பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில், திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் மற்றும் இந்த விழாவை கொண்டாடும் உப கோவில்களில் கொடியேற்றம் நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில் யானைகளின், ஆடை ஆபரண அலங்காரம், முத்துமணி குடைகளின் கண்காட்சி மற்றும் மாதிரி வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.
இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, பூரம் திருவிழாவை முன்னிட்டு, நெய்தலைக்காவ் பகவதி அம்மன் யானை மீது எழுந்தருளி அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.
பூரம் தினமான இன்று காலை, கணிமங்கலம் சாஸ்தாவின் எழுந்தருளல், பிரஹ்மசுவம் மடத்தில் வரவு, பிரபல இலஞ்சித்தறை மேளம், உபகோவில் மூலவர்கள் யானைகள் அணிவகுப்புடன், வடக்குநாதரை வணங்கும் வைபவம் நடக்கிறது.
பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்கள், போட்டி போட்டு நடத்தும் ஆடை ஆபரணங்கள் அணிந்து, அணிவகுத்து நிற்கும் யானைகள் மீதுள்ள ‘முத்துமணி குடை மாற்றம்’ நிகழ்வு மற்றும் வானவேடிக்கையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், திருச்சூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement