சென்னை: அஜித், விக்ரம், சிம்பு படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் SS சக்கரவர்த்தி கேன்சரால் உயிரிழந்தார்.
அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் உட்பட மொத்தம் 9 படங்களை தயாரித்துள்ளார் SS சக்கரவர்த்தி.
இந்நிலையில், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் உடலுக்கு பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் SS சக்கரவர்த்தி குறித்து மிக உருக்கமாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
SS சக்கரவர்த்தி உடலுக்கு வைரமுத்து அஞ்சலி: 1997ம் ஆண்டு வெளியான அஜித்தின் ராசி திரைப்படம் மூலம் தயாரிப்பாளரானவர் SS சக்கரவர்த்தி. நிக் ஆர்ட்ஸ் என்ற பேனரில் 10க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில், 9 படங்கள் மட்டும் அஜித் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ் சக்கரவர்த்தி.
அஜித்தின் ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அதேபோல், சிம்புவின் காளை, வாலு ஆகிய படங்களையும், விக்ரமின் காதல் சடுகுடு படத்தையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், தயாரிப்பாளர் SS சக்கரவர்த்தி கடந்த 8 மாதங்களாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
கேன்சர் பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர் தற்போது உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசமான உடல் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த SS சக்கரவர்த்தி, சிகிச்சை பலனின்றி காலமானார். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்துவும் தயாரிப்பாளர் SS சக்கரவர்த்தி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து டிவீட் செய்துள்ள வைரமுத்து, “நண்பா! நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி! மறைந்துவிட்டாயா அஜித்தை வைத்து நீ தயாரித்த வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, வரலாறு ஆகிய 7 படங்களுக்கும் என்னையே எழுத வைத்தாயே. தமிழ்க் காதலா! காசோலைகள் வந்த இடத்திலிருந்து சாவோலையா? கலங்குகிறேன்; கலையுலகம் உன் பேர்சொல்லும்” என பதிவிட்டுள்ளார்.
அஜித் – நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்திலும் பாடல்கள் ஹிட் அடித்தன. தேவா, ஏஆர் ரஹ்மான், பரத்வாஜ், மணிசர்மா என இசையமைப்பாளர்கள் மாறினாலும், வைரமுத்துவையே பாடல்கள் எழுத வைத்துள்ளார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. இதனை நினைவுகூர்ந்து வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதும், இரங்கல் தெரிவித்துள்ளதும் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.