தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் விழா நடத்தப்பட்டது. அப்போது தொடக்கப் பள்ளி என்பதை தனித்துறையாக மாற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மன்றத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
டெட் போட்டித் தேர்வு எப்போது?
ஆசிரியர்களுக்கான நன்மைகளை பெற்று தருவதில் இந்த அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே மன்றத்தினர், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஆகியோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். TET-க்கு பின்னர் போட்டித் தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. எப்போது நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கொரோனாவிற்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கிறது.
வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
இந்த தேர்வு தொடர்பான 149 GO இருக்கக் கூடாது என்று பலரின் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான முடிவு எடுக்கும் போது உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதி வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது வழங்கப்படுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு, ஆசிரியர்கள் நலன் கருதி பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
சி.ஏ.ஜி அறிக்கை
அதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தேவை வரும் போது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். சி.ஏ.ஜி அறிக்கை குறித்து பதிலளிக்கையில், இந்த அறிக்கையை ஒவ்வொரு துறை அமைச்சர்களும் படித்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி படித்து பார்க்கையில் கடந்த ஆட்சியில் 515 பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளனர். ஆனால் எந்த விதிகளையும் பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டிய தேவையே ஏற்படவில்லை.
மாணவர்கள் சேர்க்கை
உயர் நிலைப் பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களின் விகிதம் 11 சதவீதம் குறைந்துள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் விகிதம் 14 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படித்தான் கடந்த கால ஆட்சி அலட்சியமாக நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். ஆசிரியர்கள் பணி ஓய்வு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, தற்போதே 10,143 ஆசிரியர்கள் பி.டி, எஸ்.எம்ஸ் மூலம் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகிறார்கள்.
டி.ஆர்.பி கால அட்டவணை
இந்த இடத்தை நிரப்ப டி.ஆர்.பியிடம் கால அட்டவணை அளிக்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றார். ஆசிரியர் போட்டி தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பேசிவிட்டு சொல்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.