சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களின் இணைப்பு அங்கீகாரத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னரே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள முடியும்.
அந்தவகையில், பொறியியல் கல்லூரிகள் வரும் 2023-24-ம்கல்வியாண்டுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கின. ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதேபோல, அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரத்துக்கான விண்ணப்ப பதிவும் ஏப்.24-ம் தேதியுடன் முடிந்தது.
இதற்கிடையே, காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், 6 தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் கோரிவிண்ணப்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது: ‘‘2023-24ம் கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரஅனுமதி கோரி 6 கல்லூரிகள்விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவில்லை. இதனால், அந்தக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது. கணிசமான கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகள் முழுமையின்றி இருப்பதால், இந்தஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.