ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான என்டிஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவை நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னெடுத்து சென்றனர். முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து தள்ளினார். அப்போது, ஹைதராபாத் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு ஆந்திராவில் ஆட்சி அமைத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சூடேற்றியுள்ளது. குறிப்பாக நடிகையும், நகரி தொகுதி எம்எல்ஏ-வுமான ரோஜா நடிகர் ரஜினிக்கு எதிர்வினையாற்றியிருப்பது பேசு பொருளாகியுள்ளது.
ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சி 2004ல் ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு 2014ல் ஆந்திரா பிளவுபட்டு ஹைதராபாத் தனி மாநிலமாக உருவெடுத்தது. 2014 இல் இருந்து 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவை ஆட்சி செய்தது. அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக தெலுங்கு தேச கட்சியின் சந்திரபாபு நாய்டுவுக்கும் ஹைதராபாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
இந்த 20 ஆண்டுகளில்தான் ஹைதராபாத் நல்ல வளர்ச்சி அடைந்தது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாய்டுதான் காரணம் என கூறியுள்ளார். ரஜினிகாந்துக்கு தெலுங்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ரஜினியின் கருத்துக்கள் என்டிஆரின் ஆன்மாவை புண்படுத்தும்.
சட்டப்பேரவையில் என்டிஆரை சந்திரபாபு நாயுடு எப்படி அவமானப்படுத்தினார் என்பது குறித்த பதிவுகள் மற்றும் வீடியோக்களை ரஜினிகாந்துக்கு அனுப்பி வைப்பேன். ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் அவரது கருத்து மாநிலத்திலும், தெலுங்கு தேசம் கட்சியிலும் உள்ள என்டிஆர் ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது” என ரோஜா அதிருப்தி தெரிவித்தார்.
ரஜினி மீது சரமாரி தாக்கு
ரஜினியின் பேச்சுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி கடுமையாக சாடியுள்ளார். ”சில தெலுங்கு தேச தலைவர்கள் எழுதிய திரைக்கதையை ரஜினி மேடையில் படித்திருக்கலாம். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதால் அவரை மிரட்டுவதற்காகவே ரஜினி விஜயவாடாவுக்கு அழைத்து வரப்பட்டார். இதெல்லாம் சந்திரபாபுவின் ”மைண்ட் கேம்கள்”. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் நான்கு நாட்கள் ஓய்வெடுக்கும் ரஜினி, வெறும் பாராட்டுக்காக அப்படி பேசியிருக்கக்கூடாது . இதனால் அவர் தனது நற்பெயரைக் குறைத்துக்கொண்டதோடு தனது மரியாதையையும் அவர் இழந்துள்ளார்” என்று கோடாலி நானி காட்டமாக பேசியுள்ளார்.