சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) லோகேஷ் கனகராஜுடன் இணையவிருப்பதாக கூறப்படும் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக இரண்டு படங்களை கொடுப்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் இதுவரை தான் இயக்கிய நான்கு படங்களையும் ஹிட்டாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக, விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி லோகேஷ் கனகராஜுக்கான டிமாண்டை அதிகரிக்க செய்துள்ளது. அவரது மேக்கிங், திரைக்கதை என அனைத்திலும் புதுமை தென்படுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
லியோ லோகேஷ்: விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கி வருகிறார். காஷ்மீரில் ஷூட்டிங் முடிந்த சூழலில் சென்னையில் இப்போது ஷூட்டிங் நடந்துவருகிறது. விக்ரம் படத்தில் எல்சியூவை லோகேஷ் உருவாக்கியிருந்ததால் லியொ படத்திலும் அதனை கனெக்ட் செய்யும் விதமாக திரைக்கதையை அமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
கைதி 2: லியோ படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கவிருக்கிறார். கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படம்தான் லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர், விக்ரம் போன்ற பெரிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. எனவே அதன் இரண்டாம் பாகத்தை கூடுதல் கவனத்துடன் இயக்க வேண்டுமென்பதில் லோகேஷ் தீவிர ஆர்வத்தோடு இருக்கிறார். ரசிகர்களும் கைதி 2வுக்காக வெறித்தனமான வெயிட்டிங்கில் இருக்கின்றனர்.
ரஜினியுடன் இணையும் லோகேஷ்: இதற்கிடையே ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கவிருக்கிறார் என சில மாதங்களாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு அடுத்து ரஜினினியை கமலும், லோகேஷும் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின்போதே ரஜினி – லோகேஷ் கூட்டணி உறுதியாகவிட்டதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அவர்கள் இணையும் படம் ஏதோ காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
தயாரிப்பாளர் யார்?: இப்போது இந்தக் கூட்டணி இணைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. படத்தை தயாரிக்க மொத்தம் ஏழு தயாரிப்பு நிறுவனங்கள் ரேஸில் இருக்கின்றன. இவற்றில் சன் பிக்சர்ஸுக்கோ இல்லை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோவுக்கோ அந்த வாய்ப்பு செல்லும் என தெரிகிறது. இதற்காக மிகப்பெரிய தொகையை லோகேஷ் கனகராஜும், ரஜினியும் சம்பளமாக பெறவிருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி போட்ட கண்டிஷன்?: இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு ரஜினிகாந்த் ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனது கேரியரில் பிரமாண்ட வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்றான பாட்ஷா படம்போல் இந்தப் படத்தை உருவாக்கி வெற்றியை கொடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டிருக்கிறாராம்.
இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் ரஜினி படத்தின் ஸ்க்ரிப்ட்டை தீவிரமாக உருவாக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், லோகேஷுடன் இணையும் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் சிலர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.