கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தகவல்

பாட்னா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம் என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கடந்த 24-ம் தேதி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம், ‘‘வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுவது குறித்து, பாட்னாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மிக முக்கியமானது என்பதால், அதன் பிரச்சாரத்தில் தலைவர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். அதனால் கர்நாடக தேர்தலுக்குப்பின், எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெறலாம். இதில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமனதாக தேர்வு

அடுத்த மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள, எதிர்க் கட்சிகளின் கூட்டணியை உருவாக்கு வது குறித்து நாங்கள் நிச்சயமாக ஆலோசிப்போம். கர்நாடக தேர்தல் முடிவடைந்ததும், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் இடத்தை நாங்கள் இறுதி செய்வோம். இந்த கூட்டத்தை பாட்னாவில் நடத்தும்படி மம்தா கேட்டுக் கொண்டார். ஒருமனதாக பாட்னா தேர்வு செய்யப்பட்டால், எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்த கூட்டம் பாட்னாவில் நடைபெறும். பாஜக அரசுக்கு எதிராக, நாட்டில் அதிக கட்சிகளை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சி மேற்கொள்கிறோம்.

சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரை சந்தித்தேன். பாஜக அல்லாத கட்சிகளை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைக்க நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பொது தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுதான் எனது லட்சியம். இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.