கட்டணம் செலுத்த பணம் கேட்ட கல்லூரி மாணவியை லாட்ஜில் அடைத்து வைத்து ரவுடிகள் சித்ரவதை.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரே வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரைப் பார்த்ததும், பயத்தில் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
இதைப்பார்த்து சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவர்களை விரட்டிப் பிடித்தனர். காவல்துறையினருக்கு பயந்து வேகமாக ஓடிய வாலிபர்கள் தடுமாறி கீழே விழுந்ததில், அவர்களின் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஊட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கருத்து வேறுபாட்டால் பெற்றோரைப் பிரிந்து கோவையில் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அந்த மாணவி கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக தன் நண்பர் ஒருவரிடம் உதவிகேட்டு உள்ளார்.
அந்த மாணவன் மூலம் பிடிபட்ட நபர்கள் மாணவிக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இதனைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ரவுடிகள் மாணவியை பணம் தருவதாக ஒரு விடுதிக்கு அழைத்து அங்கு அவரை மூன்று நாள்களாக அடைத்து வைத்து மிரட்டியும், அடித்தும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த நேரத்தில் சில பொருள்கள் வாங்க வெளியே சென்ற போதுதான் போலீஸைப் பார்த்து தப்பி ஓடியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த லாட்ஜில் இருந்து கல்லூரி மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.