சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் அறிவிப்பு இன்று நள்ளிரவு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை அதுதொடர்பாக கூட லைகா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே62ல் நடிக்க உள்ள நிலையில், அந்த படத்திற்கான கதை, நடிகர்கள், ஹீரோயின், வில்லன் என பல விஷயங்கள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
அதன் காரணமாகவே தனது உலக பைக் டூரை ஆரம்பித்து நேபாளத்தில் தற்போது சுற்றுப் பயணத்தை நடிகர் அஜித் மேற்கொண்டு வருகிறார் என்கின்றனர்.
அஜித்தின் 52வது பிறந்தநாள்: நடிகர் அஜித் நாளை மே 1ம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். அமர்க்களம் படத்தில் ஷாலினி உடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அனோஷ்கா என்கிற மகளூம் ஆத்விக் என்கிற மகனும் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு உள்ளனர்.
நடிகர் அஜித் தனது 52வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடப் போவதில்லை என்றும் தனது பைக் டூரிலேயே கொண்டாட உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏகே 62 அப்டேட் கன்ஃபார்ம்: ஆனால், நீண்ட காலமாக ஏகே 62 அப்டேட்டுக்காக காத்திருக்கும் தனது ரசிகர்களை தவிக்க வைக்கக் கூடாது என்பதற்காக படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பாகவே படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு நடிகர் அஜித் சம்மதம் தெரிவித்துள்ளார் என்கின்றனர்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு மே 1 பிறந்த உடனே அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஏகே 62வுக்கு சம்மர் ஹாலிடே: பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் ஏகே 62 படம் மார்ச், ஏப்ரல் மாதங்களே முடிந்த நிலையில், மே மாதத்தில் கூட ஆரம்பிக்காது என்றும் ஜூன் மாத தொடக்கத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் அதுவரை நடிகர் அஜித் உலக பைக் டூரில் இருப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ஏகே 62 ஷூட்டிங் தாமதமாகும் தகவல் ரசிகர்களை சற்றே அப்செட் ஆக்கி உள்ளது.