பஞ்சாப் மாநிலம், லூதியானாவின் கியாஸ்புரா பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை எரிவாயு கசிவு ஏற்பட்டதில் எதிர்பாராதவிதமாக 9 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதில் பாதிக்கப்பட்ட 11 பேர் மயக்க நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து வெளியான தகவலின்படி, இதுவரையில் எரிவாயு கசிவுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், சம்பவம் நடந்த தொழிற்சாலைப் பகுதியைச் சுற்றிவளைத்த தீயணைப்புவீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 35 பேர்கொண்ட ரசாயன, உயிரியல், கதிரியக்கம், அணுசக்தி (CBRN) குழுவை தேசிய பேரிடர் மீட்புப்படை பணியில் ஈடுபடுத்தியிருக்கிறது.
மீட்புப்பணி குறித்துப் பேசிய தேசிய பேரிடர் மீட்புப்படை ஐ.ஜி நரேந்திர பண்டேலா, பாதிக்கப்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, எரிவாயு கசிவுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து லூதியானாவின் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் ஸ்வாதி திவானா, “நிச்சயமாக இது எரிவாயு கசிவுதான். இதில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது முதல் வேலையாக தொழிற்சாலையைச் சுற்றியிருக்கும் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது” என்று ஊடகத்திடம் கூறினார்.
அதோடு இந்த சோக சம்பவம் குறித்து தகவலறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “கியாஸ்புரா பகுதியிலுள்ள தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றன. தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று ட்வீட் செய்திருக்கிறார்.