சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுகவின் தலைவர்கள், குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருமே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க வந்தபோது நானும் உடன் இருக்க வேண்டும் என்று என்னை தொலைபேசியில் அழைத்திருந்தனர்.
அந்த அழைப்பின்படி, எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக மாநிலத் தலைவரான நான் உட்பட அனைவருமே கலந்து பேசினோம். குறிப்பாக, 2024ல் நம்முடைய இலக்கு, திமுக ஆட்சி மீது மக்கள் எத்தகைய கோபத்தில் இருக்கின்றனர்? திமுக ஆட்சி மக்களுக்கு எதிராக எப்படி மாறியிருக்கிறது? என்பதை சமீப காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதனடிப்படையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் புதுச்சேரியிலும் வெற்றி பெற்று, 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பாரத பிரதமர் 400 எம்பிக்களுடன் மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். இந்த கருத்தை நானும், அதிமுக தலைவர்களும் பாஜக தேசிய தலைவர்களிடம் முன்வைத்தோம். நிச்சயமாக அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக எத்தனை இடங்களில் போட்டியிடும், கூட்டணிக் கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிடுவார்கள் என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் நேரமும் காலமும் இருக்கிறது. எனவே இந்த நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்தோ, எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் பேசியது, திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை எப்படி தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் திருப்பி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது என்பது குறித்துதான்.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கின்ற மக்களின் மனநிலையை எப்படியெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளாக மாற்றப்போகிறோம் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இருக்கின்ற சவால். ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். ஊழலுக்கு எதிராக பாஜக இருக்கிறது.” என்று அண்ணாமலை கூறினார்.