ஆனந்த விகடன் சினிமா விருதுகளின் முக்கிய விருதான எஸ்.எஸ்.வாசன் விருது இம்முறை இயக்குநர் மணிரத்தினத்திற்கு வழங்கப்பட்டது. கமல்ஹாசன் இந்த விருதை வழங்கினார். பாடலாசிரியர் விவேக் விருது விழாவில் இந்த குறிப்பிட்ட நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
முதலில் மேடையேறிய கமல் ‘உயிரே, உறவே, தமிழே… வணக்கம்’ என தனக்கேயான பாணியில் பேசத்தொடங்கினார். “எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து சினிமால இருக்கேன். அப்போதிலிருந்து எஸ்.எஸ் வாசன் சாரை பார்த்துட்டு இருக்கேன். அவர் வீட்டு வாசல்ல நின்னு அவரை பார்த்துவிடுவேனா என யோசித்த காலங்கள் உண்டு.
நான் எப்போதும் அண்ணாந்து பார்த்த ஒருவர் எஸ்.எஸ்.வாசன். அவர் பெயரில் கொடுக்கப்படும் இந்த விருதை கொடுக்கும்போது பெருமிதத்தைவிட பணிவுதான் அதிகம் வருகிறது. ஆனந்த விகடன் மேடையில் பலமுறை விருது வாங்கியிருக்கிறேன், கொடுத்தும் இருக்கிறேன். வாங்கும்போதேல்லாம் கொடுத்ததாகவும், கொடுக்கும்போதெல்லாம் வாங்கியதாகவும் தோன்றும்” என்றார்.
விருதைப் பெற்றுக்கொண்ட மணிரத்னம் “விகடன்ல மார்கே போடமாட்டாங்க. அதனால்தான் அவார்டாவது கொடுக்குறாங்கன்னு உடனே வாங்கிட்டேன். அது என்னன்னு தெரியல விகடனோட ஹெட் மாஸ்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். 40, 45 மேல மார்க் போடவே மாட்டாங்க!” என்று ஜாலியாக தன் ஆதங்கத்தை பதிவுசெய்ய “படிக்குற பசங்களுக்கு இருக்குற கோபம் இது. எங்கள மாதிரி ஆட்கள் கிடைச்சதே போதும்ன்னு இருந்துருவோம்.” என கலாய்த்தார் கமல்.
தொடர்ந்து பேசிய மணிரத்னம், “எஸ்.எஸ்.வாசன் சார் பேர்ல விருது வாங்கறது ரொம்பப் பெருமையா இருக்கு. நான் சின்ன வயசுல அவங்க வீட்டுக்கு போயிருக்கேன் அவர் டிஸ்கஷன் ரூம், கதைக்குழு எல்லாம் பார்த்திருக்கேன். தமிழ் சினிமாவை முழுமையா பேன் இந்தியா ஆக்குனது அவர்தான். அவர் பேருல விருது வாங்கறது அதுவும் கமல் சார் கையால வாங்குறது ரொம்ப பெருமையா இருக்கு.”
“வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்ததை பார்த்தா என்ன எப்போ ரிட்டையர் ஆகுறீங்கன்னு கேட்குற மாதிரி இருக்கு. ஆனா, எனக்கு இன்னும் நிறைய பண்ணனும் ஆசை இருக்கு. தொடர்ந்து படங்கள் பண்ணிட்டே இருப்பேன்’ என்றார் மணிரத்னம்.
“என்னைய கேட்டா இன்னைக்கே இன்னொரு விருதை மணிரத்தினத்திற்கு கொடுத்திருப்பேன். அவர் அவரோட மேடைல கூட இவ்வளவு பேசி நான் பார்த்தது இல்லை.” என்றார் கமல். இதற்கு பிறகு, ‘நாயகன்’, ‘தளபதி’, ‘பேன்-இந்திய சினிமா’ என உரையாடல் தொடர்ந்தது. ரஜினி-கமல் வைத்து படம் இயக்குவது பற்றியும் இதில் பேசியிருந்தார் மணிரத்னம்.
அனைத்தையும் கீழுள்ள வீடியோவில் காணலாம்!