அமிர்தசரஸ்:
பஞ்சாபில் இன்று காலை நிகழ்ந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ளது கியாஸ்பூரா பகுதி. இங்கு ஒரு ரசாயனத் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் வெள்ளையும், ஊதாவும் சேர்ந்த நிறத்தில் திடீரென அந்த தொழிற்சாலையின் புகைப்போக்கியில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியது. வழக்கத்துக்கு மாறான நிறத்திலும், அதிகமாகவும் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் சிலர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீர் திடீரென அடுத்தடுத்து சிலர் அப்படியே சரிந்து கீழே விழுந்தனர். இதையடுத்து, விஷ வாயுதான் பரவுகிறது என்பதை தெரிந்துகொண்ட மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பலர் தங்கள் வீடுகளுக்குள் சென்று கதவு, ஜன்னலை இறுக்கமாக மூடிக் கொண்டனர்.
இந்நிலையில், கீழே விழுந்தவர்களை அங்கிருந்த இளைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் 11 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு சுயநினைவு இல்லாமல் போய்விட்டதாகவும், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் கியாஸ்பூரா பகுதியில் முற்றிலுமாக மூடப்பட்ட ஜீப்பில் வந்து, மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் கியாஸ்பூரா பகுதியே தற்போது காலியாக உள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்த சூழலில், இன்னும் விஷவாயு பரவுவதால் பலர் சுய நினைவை இழந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், சுயநினைவை இழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட உறவினர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனப்படுத்தியது போன்ற சூழலே அங்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், கியாஸ்பூரா பகுதியில் உள்ள மக்களை மீட்டு அங்கிருந்து வெளியேற்றும் பணியில் போலீஸாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அனைவரும் முகமூடி அணிந்தபடியே உள்ளனர்.
இதனிடையே, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவத்மான், மக்களை மீட்கும் பணியில் அரசாங்கம் முழுவீச்சில் இறங்கி இருக்கிறது.. எனவே யாரும் பயப்பட வேண்டாம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, விஷவாயு கசிந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், கசிந்தது என்ன வாயு.. எப்படி கசிந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.