புதுடெல்லி: மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி லட்சக்கணக்கானோரின் மனதின் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார் கடந்த 2014ம் ஆண்டு அக்டோலர் 3ம் தேதி தொடங்கிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து மாதம்தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. அதன் 100வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2014ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் இந்த வானொலி நிகழ்ச்சியை தொடங்கினோம். இன்று அது 100வது நிகழ்ச்சியை எட்டி உள்ளது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் கடிதம் மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி உள்ளனர். பல கடிதங்கள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டன. மனதின் குரல் நிகழ்ச்சி லட்சக்கணக்கான மக்களின் மனதின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நமது மக்களின் ஆளுமை இந்த நிகழ்ச்சி மூலம் பகிரப்பட்டுள்ளது. நேர்மறை எண்ணங்களையும், மக்களின் பங்கேற்பையும் கொண்டதாக மனதின் குரல் நிகழ்ச்சி இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் எனும் சிந்தனை பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டது. இது ஹரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்தி உள்ளது. அதேபோல், பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து பகிர்வதும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து பகிர்வது சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கிறது. ஒருவரது வாழ்வில் மகளின் முக்கியத்துவத்தை புரிய வைப்பதே இதன் நோக்கம்.
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மேற்கொள்ளும் சிறுதொழில்கள் குறித்து பேசி இருக்கிறோம். பெண்கள் மேற்கொள்ளும் சமூக சேவைகள் குறித்து பேசி இருக்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கதைகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. இதேபோல், தற்சார்பு இந்தியாவுக்கான பிரச்சாரம், மேக் இன் இந்தியா பிரச்சாரம், ஸ்டார்ட்அப்களுக்கான முன்னெடுப்பு ஆகியவை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மனதின் குரல் நிகழ்ச்சி தனித்துவமானதாக, நல்லனவற்றின் கொண்டாட்டமாக, நேர்மறை சிந்தனைக்கான களமாக மாறி இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சி எனது ஆன்மீக பயணமாக மாறி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்த 100வது வானொலி நிகழ்ச்சி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேட்பதற்கான ஏற்பாடுகளை பாஜக மேற்கொண்டது. மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியை நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கேட்டார்கள். வெளிநாடுகளிலும், ஐநாவிலும் மனதின் குரல் 100வது நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.