மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – பொறியாளர் உள்பட 3 பேர் கைது

விருதுநகர்: திருச்சுழி அருகே அரசு கலைக்கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பொறியாளர் உள்பட 3 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஹரிஷ்குமார் (15), கருப்பசாமி மகன் ரவிசெல்வம் (17) ஆகியோர் மின்சாரம் தாக்கி நேற்று உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நரிக்குடி போலீஸார், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

பின்னர், திருச்சுழி அருசு மருத்துவமனையிலிருந்து, மாணவர்களின் உடல்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டுசென்றனர். இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கட்டிட பொறியாளரான திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள வடவூர்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன்ராஜா (29), கட்டிட மேற்பார்வையாளர்கள் திருச்சுழி அருகே உள்ள கட்டனூரைச் சேர்ந்த பால்சாமி (29), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெரும்பச்சேரியைச் சேர்ந்த விஜயராகவன் (28) ஆகியோரை கைது செய்தனர்.

இதனிடையே, மாணவர்களின் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த மாணவர்கள் இருவரது சடலங்களையும் வாங்க மறுத்து விருதுநகர் மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன், டிஎஸ்பி அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர் துறை அலுவலர் ஆய்வு செய்து விபத்துக்கு யார் யார் பொறுப்பு என தெரிவித்த பின்னர், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்து சமாதானம் செய்தனர். இதையடுத்து, உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.