பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளுக்குப் பூட்டுப்போடும் கொடுமை/அவலம் அரங்கேறி வருவதாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெய்லி டைம்ஸ் நிறுவனம் விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது. இறந்த பெண்களின் உடல்களுடன் பாலியல் உறவில் (necrophilia) ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கல்லறைகளிலிருந்து தோண்டி எடுத்து, சடலங்களுடன் பலர் பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. (necrophilia) என அறியப்படும் இத்தகைய நிலையானது, சடலங்களுடன் உறவு வைத்துக்கொள்வதாகும்.
இந்த நிலையில், இத்தகைய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இறந்த மகள்களின் உடல்களைப் பாதுகாக்க, பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் கல்லறைகளுக்குப் பூட்டுப்போட்டுப் பாதுகாத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இஸ்லாமியராக இருந்து, தற்போது கடவுள் மறுப்பாளராக இருக்கும் ஹாரிஸ் சுல்தான் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் ஒரு பாலியல் விரக்தியில் உள்ள சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் இன்று கல்லறைகளைப் பாதுகாக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
சஜித் யூசுப் என்ற மற்றொரு பயனாளி, “பாகிஸ்தானில் இந்தச் சமூகம் பாலியல் குற்றங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உருவாக்கியிருக்கிறது. இதில் தங்களின் மகள்களைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் பெற்றோர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் ஏதோ ஒரு வகையில் தங்களின் வாழ்நாளில் பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கின்றனர். 2011-ல் முகமது ரிஸ்வான் என்பவர் 48 சடலங்களுடன் பாலியல் உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சமூகத்தில் சடலங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் அளவிலான போக்கு என்பது மிகுந்த வருத்தமளிப்பதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கின்றனர்.