திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை க்கு அருகே உள்ள பாச்சல் ஊராட்சி பகுதியில் உள்ள பசுமை நகரில் வசித்து வருபவர் சின்னன் இவரது மகன் இன்பராஜ். திருப்பத்தூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி விஷ்வா (8) மற்றும் பவீன் (6) ஆகிய குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நகர் பகுதியில் தான் கட்டிய வீட்டின் மீது பாரத் ஸ்டேட் வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.
ஏற்கனவே இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் 18 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். அந்தக் கடனை பாரத் ஸ்டேட் வங்கியுடன் அடைத்ததாலும் மேலும் பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கியதால் இவரது மொத்த கடன் 24 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் இன்பராஜ்.
இதனால் அடிக்கடி தன் வீட்டில் உள்ளவர்களிடம் செத்துப் போவதாக கூறியுள்ளார். நேற்று இரவு பணிக்குச் சென்று திரும்பி அவர் கடும் மன உளைச்சலின் காரணமாக இன்று காலை 5:30 மணி அளவில் வீட்டில் குழந்தைகளின் தொட்டில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.