தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலரையே ஆபிஸ் புகுந்து வெட்டி படுகொலை செய்யும் அளவுக்கு சட்ட ஒழுங்கின் மீது குற்றவாளிகளுக்கு இருக்கும் பார்வை பலவீனமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சாடி வருகின்றனர்.
நடந்து வரும் கொலை, வன்கொடுமை, கூட்டு பலாத்கார சம்பவங்களுக்கு மத்தியில் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ” காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன். எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன்.
தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை. துப்பாக்கிச் சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை” என்று சூளுரைத்தார்.
முதல்வரின் இந்த அறிக்கை விமர்சனத்திற்குள்ளானது. மேலும், மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகளை குறித்து கேள்வி கேட்கும் நபர்களை விரட்டி விரட்டி கும்பல் கொலை செய்கிறது. திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரை நேற்று பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக நடந்த காவல் கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர், தமிழக காவல்துறையின் சீறிய முயற்சியால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன.