கோயம்புத்தூரில் பரிதாபம் : மின்கசிவினால் தீ விபத்து – தூங்கிக் கொண்டிருந்த அரசு பெண் வழக்கறிஞர் பலி.!
கோயம்புத்தூர் மாவட்டம் நியூ சித்தாபுதுர் அருகே நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி. முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆன இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதனால் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர், நேற்று கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அவர் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறை தீப்பிடித்து எறிந்தது.
இதில் அவர் மீதும் தீ பரவியதால், வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. உடனே அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ரேணுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் ரேணுகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு எவ்வாறு ஏற்பட்டது? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.