சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
போட்டி பரபரப்பை எட்டி கடைசிப் பந்துக்கு சென்றிருந்த நிலையில், பஞ்சாப் அணியின் சார்பில் க்ரீஸில் நின்ற ராசாவும் ஷாருக்கானும் நடுவரிடம் சென்று சில நிமிடங்கள் எதையோ விவாதித்தனர். இருவரும் நடுவரிடம் பேசியதற்கு பின்னால் ஒரு பலே திட்டம் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.
பதிரனா வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. திறம்பட பந்துவீசிய பதிரனா முதல் 5 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆக, கடைசிப் பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் சிக்கந்தர் ராசாவும் நான் ஸ்ட்ரைக்கில் ஷாருக்கானும் இருந்தனர். கடைசிப் பந்துக்கு முன்பாக தோனியும் கொஞ்சம் ஃபீல்டையெல்லாம் மாற்றி பரபரப்பாக தயாரானார். பதிரனாவும் பந்துடன் ரன்னப்பை தொடங்க ரெடியாக இருந்தார்.
இந்நிலையில்தான், திடீரென சிக்கந்தர் ராசா ஸ்ட்ரைக்கிலிருந்து மூவ் ஆகி நடுவரை நோக்கி சென்றார். ஷாருக்கானும் நடுவரிடம் செல்ல இருவரும் நடுவரிடம் சில நிமிடங்கள் உரையாடினர். பஞ்சாப் பெவிலியனிலிருந்தும் எதோ மெசேஜ் சொல்லப்பட்டது. இதன்பிறகுதான் கடைசிப் பந்தில் மூன்று ரன்களை ஓடி வெற்றி பெறவும் செய்தனர்.இருவரும் நடுவரிடம் என்ன பேசினார்கள் என்பது பற்றி பஞ்சாப் அணியின் ராகுல் சஹார் பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.
‘கடைசிப் பந்தில் 3 ரன்கள் ஓட வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால் நான் ஸ்ட்ரைக்கில் இருந்த ஷாரூக்கானை வெளியே அழைத்துவிட்டு அவருக்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ராரை உள்ளே அனுப்பலாமா என்று யோசித்தோம். ஹர்ப்ரீத் ப்ரார் ஷாரூக்கை விட வேகமாக ஓடக்கூடியவர். அதனால்தான் அந்த யோசனை. இதைத்தான் அவர்களும் நடுவரிடம் பேசினார்கள்.’ என்றார்
ஆனால், என்ன நடந்ததோ ஷாருக்கான் வெளியேறவில்லை. சிக்கந்தர் ராசா அந்த பந்தை பேக்வர்டு ஸ்கொயர் லெகில் அடிக்க இருவரும் வேகவேகமாக 3 ரன்களை ஓடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.