கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 22 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
இந்த சூழலில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கம்பு, கத்தி, உருட்டு கட்டை என இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
சக மாணவர்கள் அவர்களை தடுக்க முயன்றபோது காயம் அடைந்தனர். தாக்குதலின்போது 4ஆம் ஆண்டு படித்து வந்த பாஸ்கர் (22) என்ற மாணவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கலவரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
newstm.in