புனே,
பிரதமர் மோடி பங்கேற்ற 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நிறைவடைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் லண்டன் நகரில் மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் உள்பட, அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் உள்பட, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகர் என பல்வேறு இடங்களிலும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இந்திய வம்சாவளி மக்கள் திரண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, திரைப்பட பின்னணி பாடகியான அனுராதா பட்வால் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது ஒரு தனித்துவ திட்ட தொடக்க நிகழ்ச்சியாகும். நாட்டில் உள்ள சில நல்ல விசயங்களை செய்யும் ஒவ்வொருவரை பற்றியும் பிரதமர் மோடி அறிந்து வைத்திருக்கிறார். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்.
இந்த தனிப்பட்ட முறையில் அணுகும் நடைமுறையானது வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே நான் நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் கூறும்போது, அழகான, ஆச்சரியம் தரும் நிகழ்ச்சியாக இருந்தது. பிரதமரின் குரல் தாக்கம் ஏற்படுத்த கூடிய வகையில் இருந்தது. மகிழ்ச்சி அடைந்தேன் என கூறியுள்ளார்.
இதேபோன்று இந்தி திரைப்பட இயக்குநர் ரோகித் ஷெட்டி கூறும்போது, ஊக்கம் அளித்தது போன்று உணர்ந்தேன். நமக்கு ஒரு தலைவர் சரியான பாதையை காட்ட முடியுமென்றால், சாத்தியம் இல்லாதது எதுவுமில்லை என கூறியுள்ளார்.
மோடிஜி மக்களுடன் இணைந்திருக்க விரும்பினார். அதுவே ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம். என்னை அழைத்ததற்காக அதிர்ஷ்டம் வாய்ந்தவன் என நான் உணர்கிறேன் என்று நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.
நடிகை மாதுரி தீட்சித் நேனே கூறும்போது, பொது மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள பிரதமர் மோடி நேரம் எடுத்து கொள்கிறார். இது ஆச்சரியம் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.