புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாக கூறி கடலூரைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணிடம் 32 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டவர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வி ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்த நிலையில், அவருக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் மருந்துகளை விற்க சப் டீலர் வேண்டும் என அமன் எண்டெர்பிரசைஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.
இதனை நம்பிய செல்வி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலையில், அவர்கள் அனுப்பிய போலியான ஒப்பந்த ஆவணங்களை உண்மையென நினைத்து அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு கடந்த 2022 மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை பல தவணைகளில் மொத்தம் 32 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
அவருக்கு மருந்துகள் அனுப்பப்படாததால், சைபர் கிரைம் பிரிவில் செல்வி புகாரளித்துள்ளார். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் கார்காரில் இருந்து நைஜீரிய மோசடி கும்பல் செயல்பட்டதும், இதே பாணியிலான மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் புழல் சிறையில் இருந்ததும் தெரியவந்தது.
சிறையில் இருந்தவர்களை காவலில் எடுத்த வழக்கு பதிந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.