சூடானில் இருந்து 1,888 பிரஜைகளை வெளியேற்றி இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம்
சூடானில் இராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் கார்ட்டூமில் இரு படைகளுக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கி சூடு தாக்குதல் 3 வாரங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து பிரித்தானியா, இந்தியா, போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் பிரித்தானியா அதன் ராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை முதற்கட்டமாக சூடானில் இருந்து வெளியேற்றி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக 21 விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கையில் பிரித்தானிய பிரஜைகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் என 1,888 பேரை சூடானில் இருந்து வெளியேற்றி இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரித்தானிய அரசாங்கம் தங்களது வெளியேற்ற பணியை முடித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
EPA-EFE
போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம்
இந்நிலையில், இனி சூடானில் நிலவி வரும் மோதல் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர அனைத்து ராஜதந்திர வழிகளையும் மேற்கொள்ள கவனம் செலுத்துவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் தூதரக ஆதரவை வழங்குவதிலும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் செயல்படும் என தெரிவித்துள்ளது.