மதுரை : அறிவுரைக் கூறிய அண்ணனை மதுபோதையில் வெளுத்து வாங்கிய தம்பி கைது.!
மதுரை மாவட்டத்தில் உள்ள விராட்டிப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டுமானத் தொழிலாளியாக இருந்து வரும் இவருடைய தம்பி திரவியம். மதுபோதைக்கு அடிமையான திரவியம் அடிக்கடி வீட்டுக்கு குடித்துவிட்டு வந்து தெருவில் நின்று சத்தம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் திரவியம் நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து தெருவில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் பாலமுருகனுக்கு தகவல் தெரிய வந்தது. உடனே அவர் தன் தம்பியைத் தேடிச் சென்று வீட்டுக்கு போய் தூங்குமாறு அறிவுறுத்தினார்.
இதனால், ஆத்திரமடைந்த திரவியம், வேல் கம்புடன் வந்து தனக்கு அறிவுரை சொன்ன அண்ணன் பாலமுருகனை சரமாரியாகத் தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாலமுருகன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி போலீசார் விரைந்து வந்து பாலமுருகனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளி திரவியத்தைக் கைது செய்தனர். அறிவுரைக் கூறிய அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.