சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு உள்ளுறைப் பயிற்சி பெற முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, மருத்துவம் படிக்கின்றனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், எஃப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (உள்ளுறை மருத்துவர் பயிற்சி) ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்தால்தான், மருத்துவராகப் பணியாற்ற முடியும்.
இந்நிலையில், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உள்ளுறைப் பயிற்சி அளிப்பதில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு உள்ளுறை பயிற்சி அளிப்பதற்கான இடங்கள், இந்திய மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு உள்ளன என்பது குறித்த பொது அறிவிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.
அதனடிப்படையில் பல்வேறு கோரிக்கைகளும், விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
இது தொடர்பாக ஆணையத்தில் விவாதிக்கப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி என்எம்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளுறை பயிற்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டாம் என மாநில மருத்துவக் கவுன்சில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.