பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷெர்பூர் சவுக் என்ற பகுதியில் கோயல் பால் பொருட்கள் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 7.15 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிரூட்டும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென விஷ வாயு வெளியேறியுள்ளது.
இதனை சுவாசித்த ஊழியர்கள் அடுத்தடுத்து மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். இந்த ஆலையை சுற்றி 300 மீட்டர் தொலைவுக்கு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அருகில் வீடுகளில் இருந்தவர்களும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அதில், மூன்று பேரின் உடல் நீல நிறமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. தொழிற்சாலை மற்றும் அருகில் உள்ள வீடுகளில் மயங்கிக் கிடந்த 11 பேரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொழிற்சாலைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ள பதவில், லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் எரிவாயு கசிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. காவல்துறை, நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.