குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, உள்ளாட்சி தினம், உலக தண்ணீர் தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் இன்று (மே 1ஆம் தேதி) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள், ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், நீர்நிலைகளை புணரமைத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து விவாதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளகத்தில் நடத்தக் கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.