வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹாங்காங்: சீனாவில் கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவம் குறித்து சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டு வந்த நிலையில், திடீரென காணாமல் போன நபரை, மூன்றாண்டுகளுக்கு பின் போலீசார் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின், ஹூபாய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், 2019 டிச., மாதம் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. ஆரம்பத்தில் சீனாவின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகவிடாமல் அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், சீனாவின் மருத்துவமனைகளில் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் குவிவதையும், மயானங்களில் உடல்கள் வரிசையில் காத்திருப்பதையும், சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அதில், பாங் பின் மற்றும் சென் கியூஷி ஆகியோர் வெளியிட்ட வீடியோக்கள், அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தின. இவர்கள் இருவரும் 2020, பிப்., மாதம் திடீரென காணாமல் போயினர்.
இந்நிலையில், 2021, செப்., மாதம், சென் கியூஷி, தன் நண்பரின், ‘யு டியூப்’ சமூக ஊடகத்தில் தோன்றி, இவ்வளவு நாள் கடும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்ததாக தெரிவித்தார். அவருடன் காணாமல் போன, பாங் பின் என்பவர் எங்கு உள்ளார் என்பது தெரியாமலேயே இருந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்பட்டது.
தெருவில் சண்டையில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சீனாவில் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது வழக்கமாக இந்த பிரிவில் தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட பாங் பின், நேற்று விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement