இன்று மே தினம். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்ற மகத்தான நாள். இது உலகத் தொழிலாளர்களுக்கான நாள். இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளில் முதல்வர்
மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 12 மணி நேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது. அப்பாடா… இதைத் தான் எதிர்பார்த்தோம் என்று தொழிலாளர்களும், தொழிலாளர் நலச் சங்கங்களும் பெருமூச்சு விட்டுள்ளன. முன்னதாக தொழிலாளர் தினத்தை ஒட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
12 மணி நேரம் வேலை தொடர்பாக அரசியல்வாதிகள் முடிவெடுக்க கூடாது
தொழிலாளர் நலன்
பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசும் போது, சமீபத்தில் தொழிலாளர் நலனுக்கு எதிரான மசோதா கொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இதையொட்டியே தமிழக அரசால் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. இது அனைத்து தொழிற்சாலைகளுக்குமான சட்டத் திருத்தம் அல்ல.
12 மணி நேர வேலை
குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அரசின் பரிசீலனைகளுக்கு பின்பு விதிவிலக்கு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சட்டத்தில் இருந்தன. இருப்பினும் தொழிற்சங்கங்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. இதனால் பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. திமுக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தமாக இருந்தாலும் திமுகவின் தொழிற்சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது என்பது தான் வேடிக்கை. அதற்காக அவர்களை பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
சட்ட முன்வடிவு திரும்ப பெறப்பட்டது
திமுக எத்தகைய ஜனநாயக மாண்பு கொண்ட அமைப்பு என்பதற்கு இது எடுத்துக்காட்டு. உடனடியாக அனைத்து தொழிற்சங்க தோழர்களையும் கோட்டைக்கு அழைத்து அமைச்சர்கள் முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் தொழிற்சங்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. உடனடியாக எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் துணிச்சலாக அந்த சட்ட முன்வடிவை திரும்பப் பெற்றிருக்கும் அரசு தான் திமுக அரசு என்று குறிப்பிட்டார்.
கடந்த கால துயரங்கள்
மேலும் பேசுகையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் வெயிலிலும், மழையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பலரும் உயிரும் இழந்தனர். இந்த மாபெரும் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்களை கொண்டு வந்து ஒரே இரவில் அரசு ஊழியர்களை நீக்கியது யார் என்பது உங்களுக்கு தெரியும்.
திராவிட மாடல் அரசு
தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களும், அவர்களுக்கு ஊதுகுழலாக இருக்கும் ஊடகங்களும் சேர்ந்து இதை அரசுக்கு எதிராக மாற்றிவிடலாம் என்று திட்டமிட்டு நடத்தினர். ஆனால் அவர்களின் தீய எண்ணங்களை தொழிலாளர்கள் தெளிவாக புரிந்து கொண்டனர். தொழிற்சங்கங்களால் சந்தேகம் எழுப்பப்பட்ட இரண்டே நாட்களில் அந்த சட்ட முன்வடிவை திரும்ப பெற்றுக் கொண்டே ஒரே அரசு தான் நம்முடைய திராவிட மாடல் அரசு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.