தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை எளிமையான முறையில் – உரிய
நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை
எடுத்தது.
அந்தவகையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில்
அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள்
நடைபெற்றது.
ஹட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்ததலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி
தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர்
தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொடி ஏற்றப்பட்டு
நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்
மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜூன்
ஜெயராஜ், உறுப்பினர் தயாளன் குமாரசுவாமி, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள்
தலைவர் சடையன் பாலச்சந்திரன், தவிசாளர் எம்.ராமேஷ்வரனின் பிரத்யேக செயலாளர்
ராஜன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணி
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும் இன்று
(01.05.2023) ஹட்டனில் நடைபெற்றது.
ஹட்டன் பல்பொருள் அங்காடிக்கு முன்பாக சங்கத்தின் தலைவர் நிஷாந்த
வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பமான மே தின பேரணி, ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபம்
வரை சென்றடைந்தது.
அதன்பின்னர் மே தின கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், உப தலைவர் உட்பட
அங்கத்தவர்களும், ஏனையோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
தொழில் பாதுகாப்பு, வாழ்வுரிமை உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே மே
தின பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வு
நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம்
இன்று (01.05.2023) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக தொழிற்சங்க
துறவியென போற்றப்படும் வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே அச்சங்கம்
உருவாக்கப்பட்டது. சி.வி. வேலுபிள்ளை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்படி
சங்கத்தில் அங்கம் வகித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தற்போது பழனி திகாம்பரம் தலைமை வகிக்கின்றார்.
தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அரசியல் கிளையாக செயற்படுகின்றது. தற்போது இரு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மே தினத்தை முன்னிட்டும் ஹட்டனில்
சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன்பின்னர்
கட்சி தலைமையகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, ‘கேக்’வெட்டப்பட்டு கொண்டாட்டம்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர் பிலிப், நிதிச்
செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி
தலைவர் பா.சிவநேசன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக
பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை
முன்வைத்து ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில் இன்று
(01.05.2023) நடைபெற்றது.
ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் மே தின கவனயீர்ப்பு
போராட்டம் நடைபெற்றது.
‘உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட்
தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு
போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
வீட்டுத் தொழிலாளர்களும் தொழிலாளர்களே, அவர்களின் தொழில்சார் உரிமைகள்
பாதுகாக்கப்பட வேண்டும், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் முன்வைத்து பதாகைகள்
ஊடாக காட்சிப்படுத்தபட்டிருந்தன.
அத்தோடு, எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.