`தகவலும் இல்லை, அழைப்பிதழும் இல்லை’ – பெரிய கோயில் தேரோட்டம்; திமுக எம்.எல்.ஏ-க்கள் மிஸ்ஸிங்

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைக்க ஆயிர்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தஞ்சாவூரின் அடையாளமான பெரியகோயிலில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், `பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட்’ காரணத்தால் தி.மு.க எம்.எல்.ஏக்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்ட விழா

இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், `தி.மு.கவில் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் பலரும் பெரியகோயிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர். கடந்த ஐப்பசி மாதம் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழாவில் கோயிலுக்கு வெளியே இருக்கும் அவரின் சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு தொகுதி எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் கோயிலுக்குள் செல்லாமல் சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம் கலந்து கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சதயவிழா தினத்தில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ராஜராஜசோழன் குறித்த விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை செய்து விட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். வருவதாக சொன்ன அவரும் வராமலேயே சென்று விட்டார்.

தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன்

இதே போல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகா சிவராத்தி விழா நிகழ்ச்சிகான இடம் தேர்வு செய்வதற்காக வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பெரிய கோயில் சுற்று சுவரை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்கம் வரை வந்தவர் கோயிலுக்கு உள்ளே செல்லவில்லை. அப்போது துரை.சந்திரசேகரன், `சேகர் பாபுவிடம் அண்ணே கோயிலுக்குள்ள போகவில்லை என்றால் தேவையில்லாத விமர்சனம் வரும் உள்ள போயிட்டு போகலாம்’ என சொல்லியும் உள்ளே செல்லவில்லையாம்.

இதனை தொடர்ந்து கோயிலுக்குள் மஹா சிவராத்திவிழாவை நடத்தினால் கலந்து கொள்ள முடியாது என்ற காரணத்தால் எம்.எல்.ஏக்கள் சொன்னதன் பேரில் திலகர் திடலில் விழா நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம் இருவரும் புறக்கணித்துள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கனவில் இருவரும் இருக்கின்றனர். இந்த சூழலில் தஞ்சைக்குள் இருவரும் இருந்தும் தேரோட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தஞ்சை தி.மு.க மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட சிலர் மட்டும் சென்டிமென்டை கவனத்தில் கொள்ளாமல் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்

இதே போல் கடந்த ஆண்டு விழாவிலும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் போது பெரிய கோயில் தொடர்பான விழாக்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எந்த பயமும் இல்லாமல் கலந்து கொண்டனர். சில செண்டிமெண்ட்களை மனதில் வைத்திருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பயத்தால் பெரிய கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்’ என தெரிவித்தனர்.

இது குறித்து கேட்பதற்கு தி.மு.க எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகத்தை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. அவரது தரப்பினரிடம் விசாரித்தோம், “மேயர் சண்.இராமநாதன் மற்றும் ஆணையர் சரவணக்குமார் இதற்கான ஏற்பாட்டை முன்னின்று செய்தனர். அவர்களுக்கும் எம்.எல்.ஏ- தரப்புக்கும் ஏற்கனவே சில விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டால் தேவையில்லாத சர்ச்சை உண்டாகும் என்பதால் டி.கே.ஜி செல்லவில்லை. மற்றபடி அடிக்கடி அவர் பெரியகோயிலுக்கு செல்லக் கூடியவர்தான்” என்றனர்.

திமுக எம் எல்ஏக்கள் டி.கே.ஜி நீலமேகம், துரை.சந்திரசேகரன்

இது குறித்து தி.மு.க எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனிடம் பேசினோம், “தேரோட்டம் குறித்து என்னிடம் தகவல் சொல்லவில்லை, எனக்கு அழைப்பிதழும் கொடுக்கவில்லை அதனால் நான் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்று விட்டேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.