சென்னை: கர்நாடகத்தில் நடைபெறுகிற 40 சதவிகித கமிஷன் ஆட்சியை ஆயிரம் நரேந்திர மோடிகள் அணிதிரண்டு வந்தாலும் தேர்தல் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு மீண்டும் வருவதும், பாஜக ஆட்சி அகற்றப்படுவதுமான நிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கடந்த கால காங்கிரஸ் ஆட்சி மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து திட்டங்களிலும் 85 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு, 15 சதவிகித பணமே மக்களுக்கு சென்றடைந்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை துணிந்து கூறியிருக்கிறார். கர்நாடக அரசின் மீது 40 சதவிகித கமிஷன் குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். பிரதமர் பதவியில் இருப்பவர், அடிப்படை ஆதாரமில்லாமல் அவசரத்தில், குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த 2014 தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை ஒழித்து, அதிலிருந்து மீட்கப்படுகிற பணத்தில் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்வோம், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் காப்பாற்றவில்லை. 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி கூறுகிற குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். சுதந்திர இந்தியாவில் 76 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இன்றைய இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர்களாக இருந்த எவர் மீதாவது, எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு விசாரணை நடந்ததாக பிரதமர் மோடியால் ஆதாரம் காட்ட முடியுமா? எந்த பிரதமராவது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா?
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த குற்றச்சாட்டின் மூலம் பாஜக தேர்தல் ஆதாயம் தேடியதை எவரும் மறந்திட இயலாது. ஆனால், 2004 இல் செல்பேசி எண்ணிக்கை 2.36 கோடியாக இருந்தது. 2014 இல் 95 கோடியாக அதிகரித்து தகவல் தொடர்பில் புரட்சி நிகழ்ந்தது. எனவே, பிரதமர் மோடி மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பக்கூடாது. பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற தன்மையில் பேசுவது மிகவும் அநாகரீகமானது.
டாக்டர் மன்மோகன்சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் சுதந்திர இந்தியா காணாத வளர்ச்சியை பெற்றதற்கான புள்ளி விவரங்களை பிரதமர் மோடியால் மறுக்க முடியாது. தொடர்ந்து 3 ஆண்டுகள் 9 சதவிகித வளர்ச்சி டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் நிகழ்ந்தது. இதற்கு இணையான வளர்ச்சியை மோடி ஆட்சியில் காண முடிந்ததா? இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற வகையில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம், வருடத்தில் 100 நாள் வேலை வழங்குகிற வகையில் வேலை பெறும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், நில உரிமையை பாதுகாக்கிற வகையில் சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு தொழில் வளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 14 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர்.
ராகுல் காந்தியின் கர்நாடக தேர்தல் சூறாவளி சுற்றுப் பயணத்தில் பேசும்போது, ‘மோடியின் நெருங்கிய குஜராத் நண்பரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 2014 இல் 8 பில்லியன் டாலராக இருந்தது, 2023 இல் 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது ? உலக செல்வந்தர்கள் வரிசையில் 2014 இல் 609-வது இடத்தில் இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2023 இல் 2-வது இடத்திற்கு எந்த மந்திர மாயத்தின் மூலம் உயர்ந்தார் என்பதை மோடி விளக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பிதற்கு இதுவரை பிரதமர் மோடியால் பதில் கூற முடியாதது ஏன் ? பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 5073 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் கவுதம் அதானியின் பங்கு என்ன? என்ற குற்றச்சாட்டுகளுக்கு மோடி பதில் கூறுவாரா? மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி பேசும்போது, அதானிக்கு சொந்தமான போலி கம்பெனிக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது? இது யாருடைய பணம்? என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறாத பிரதமர் மோடி, கேள்வி கேட்ட 24 நாளில் நீதிமன்ற தீர்ப்பை பெற்று தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து பழிவாங்கும் போக்குடன் செயல்பட்டார்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்டுள்ள பிரதமர் மோடி, தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கவும், கர்நாடக மக்களை ஏமாற்றவும் காங்கிரஸ் ஆட்சி மீது ஆதாரமற்ற அவதூறு குற்றசாட்டுகளை கூற முற்பட்டிருக்கிறார். அவரது கோயபல்ஸ் பிரச்சாரத்தை கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கர்நாடகத்தில் நடைபெறுகிற 40 சதவிகித கமிஷன் ஆட்சியை ஆயிரம் மோடிகள் அணிதிரண்டு வந்தாலும் தேர்தல் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியாது. ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப்பயண பிரச்சாரத்தினால் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.