ஜியோ சினிமாவில் இலவசம்
ஐபிஎல் 2023 தொடரை அனைத்து மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படும் ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத வகையில், பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்தில் போட்டியை கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமா தளம் மற்றும் செயலியில் 4K ரெஸல்யூஷனில் போட்டிகள் நேரலை செய்யப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்கலாம்.
ஜியோ சினிமா பிளான்
ஜியோவின் இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இதற்கு பின்னணியில் பலே திட்டத்தை வைத்திருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஜியோ சினிமா தளம் ஓடிடியாக உருவெடுக்க இருக்கிறது. இதில் உலகளவில் பிரபலமான வெப் சீரீஸ்கள் மற்றும் திரைப்படங்கள் எல்லாம் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களுக்கு போட்டியாக இந்த முயற்சியை ஜியோ முன்னெடுத்திருக்கிறது.
ஜியோ சினிமா சப்ஸ்கிரிப்சன்
இதற்காக உலகின் முன்னணி சினிமான நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஜியோ நிறுவனம், ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் ஜியோ சினிமா தளத்துக்கு கட்டணம் விதிக்க முடிவெடுத்திருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் டிஜிட்டல் உரிமை இப்போது ஜியோ வசம் மட்டுமே இருக்கிறது. இந்த ஆண்டு இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ, அடுத்த ஆண்டு இதற்கும் சேர்த்து இரட்டிப்பு கட்டணம் விதிக்க முடிவெடுத்திருக்கிறது. அதேநேரத்தில், ஜியோ சினிமாவை சப்ஸ்கிரைப் செய்யும் வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமாவில் இருக்கும் படங்களையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வழங்க இருக்கிறது. ஒரே சப்ஸ்கிரிப்சனில் கிரிக்கெட் மற்றும் படங்களும் பார்த்துக் கொள்ளலாம் என்பதால் வாடிக்கையாளர்களிடம் இந்த திட்டம் நிச்சயம் எடுபடும் என ஜியோ நம்புகிறது.
கலக்கத்தில் ஓடிடி நிறுவனங்கள்
ஜியோவின் பிஸ்னஸ் ஹெட் தேஷ்பாண்டே பேசும்போது, ஜியோ சினிமா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை ஜியோ சினிமா தளத்தில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் இறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ஜியோ நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தேஷ்பாண்டே தெரிவித்திருக்கிறார். அதேபோல் டேட்டா பேக்குகளின் விலையும் விரைவில் படிப்படியாக உயர்த்த ஜியோ முடிவெடுத்திருக்கிறது. ஜியோவின் இந்த முடிவு பிரபல ஓடிடி நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.