உங்களைப் பற்றி பேசாமல், மக்களின் பிரச்சனைகளை பேசுமாறு பிரதமர் மோடிக்கும் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகா தேர்தல்
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே இருப்பதால் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் காங்கிரஸ் 132 முதல் 140 தொகுதிகளைக் கைப்பற்றும் என சமீபத்திய தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கர்நாடகா பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் என்னை 91 முறை இழிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் வந்தால் ஊழல் என்பது உறுதியாகிவிடும்’’ என்று பேசினார்.
முதல் பிரதமர்
அதற்கு பதிலடி தந்த பிரியங்கா காந்தி, ‘‘மக்கள் பிரச்சனைகளை கேட்காமல், தன் பிரச்சனைகளை மக்களிடம் கூறும் பிரதமரை இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன். பாஜகவினர் எங்கள் குடும்பத்தை கொச்சையாக விமர்சித்ததை வைத்து நாங்கள் ஒரு புத்தகத்தையே எழுதலாம். தோல்வி உறுதி என தெரிந்ததும், பிரதமர் தனது வழக்கமான கண்ணீர் நாடகத்தை போடுகிறார். காங்கிரஸ் என்றால் ஊழல் என்று கூறும் பிரதமர், பாஜகவின் 40% கமிசன் குறித்து பேச மறுப்பது ஏன்.?’’ என கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் பிரதமரை ராகுல் காந்தியும் வறுத்தெடுத்துள்ளார். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் பொதுகூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘இந்த தேர்தல் என்பது உங்களுக்கானது அல்ல பிரதமரே. இது கன்னட மக்களின் நல் வாழ்விற்கும், அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்குமானது. 91 முறை காங்கிரஸ் உங்களை இழிவுபடுத்தியதாக கூறிய நீங்கள், கன்னட மக்களுக்கு இது வரை செய்ததை ஏன் கூறவில்லை. கன்னடர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்யப்போகிறீர்கள் என அடுத்த முறை பேசும் போது கூறுங்கள். உங்கள் சொந்த பிரச்சனைகளை பேசாமல் மக்களின் பிரச்சனைகளை பேசுங்கள்.
உங்களை பற்றி பேசவேண்டாம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான டிகே சிவக்குமார், சித்தராமையாவின் கட்சி பணிகளை சுட்டிக்காட்டி நாங்கள் பேசிவருகிறோம். ஆனால் நீங்கள் ஏன் முன்னாள் முதல்வர்களான எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை குறித்து பேசுவதில்லை. சாதரண மனிதன் மற்றும் ஏழைகளின் பையில் இருந்து கொள்ளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்’’ என ராகுல் காந்தி பேசினார்.