மும்பை,
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும், ஹோல்டர் 11 ரன்னிலும், ஹிட்மயர் 8 ரன்னிலும், துருவ் ஜுரேல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், ஒருபக்கம் விக்கெட்கள் சரிய மறுபக்கம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 124 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் ராஜ்ஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் அர்ஷத் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் வந்த கமரூன் கிரீனுடன் ஜோடி சேர்ந்த கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இஷான் கிஷன் 28 ரன்னில் அவுட் ஆன நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீன் 26 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் 29 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் பொறுப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 3 பந்துகளில் டிம் டேவிட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம் 19.3 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றிபெற்றது.
மும்பை அணியின் திலக் வர்மா 21 பந்துகளில் 29 ரன்களுடனும், டிம் டேவிட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 45 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.