திராவிட கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் குறித்து சொல்லிக் கொடுத்தவர் வைகோ என திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தனது பேஸ்புக் பதிவில், ‘‘வெற்றி தோல்வி மட்டுமே ஒரு இயக்கத்தின் வரலாற்று இருப்பை உறுதி செய்துவிடாது. அரசியல் போக்கில் தாக்கத்தை கொண்டுவருவதில் அதனுடைய பங்கை பொறுத்தும், எத்தகைய மாற்றத்திற்காக போராடுகிறது என்பதுவுமே அதன் முக்கியத்துவத்தை சொல்லும். மதிமுக என்பது உருவாகி கடந்த 30 ஆண்டுகளில் அது வலியுறுத்திய அரசியலே அதனை பிற திராவிட கட்சிகளில் இருந்து வேறுபடுத்தியது.
90களில் கூர்மையடைய ஆரம்பித்த ஈழப்போராட்டம், தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் எனும் சூழலில் உருவான மதிமுக, பெரிய திராவிட கட்சிகளிலிருந்து வேறுபட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு, NLC, ஈழ விடுதலை போராட்ட நிலைப்பாடு என சூழலியல் அரசியல், தமிழின சார்பு வெளியுறவுக் கொள்கை என தம்மை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பு நிலைப்பாட்டினை எடுத்து போராடியது.
இவ்வகையில் எழுவர் விடுதலை, மீத்தேன் எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, முல்லைப்பெரியார் உரிமை மீட்பு, கெயில் குழாய் எதிர்ப்பு என பிற திராவிட தேர்தல்கட்சிகளின் அரசியலை மக்கள் நோக்கி நகர்த்தியது. இவ்விடயங்களில் எவ்வித கொள்கை நிலைப்பாடும் எடுக்காத பிற திராவிட கட்சிகள் மக்களிடமிருந்து அன்னியமாகின. கடந்த 30 வருடங்களில் 2016க்குப் பின்னரே இந்த நிலைப்பாடுகளில் திமுக நிலைப்பாடு எடுக்க முயன்றது.
2010-20வரையிலான நெருக்கடியான காலகட்டத்தில் போராட்ட அரசியலை கைக்கொண்டு நின்றது மதிமுக. சாஞ்சியில் ராஜபக்சேவை எதிர்கொள்ள தொண்டர் படையை நகர்த்தியது, ஸ்டெர்லைட்டை தடை செய்ய நீதிமன்றம் சென்றது, ப்ரஸ்ஸல்ஸில் பொதுவாக்கெடுப்பை ஈழத்திற்கு கோரியது, புலிகள் மீதான தடைக்கு எதிராக நேரடியாக வழக்காடியது, மூவர் தூக்கை ரத்து செய்ய வழக்காடியது, நியூட்ரினோவிற்கு தடை வாங்கியது என நீதிமன்றப் போராட்டங்கள் மக்கள்திரள் போராட்டத்துடன் இணைந்து நடத்தியது.
கெயில் குழாய்க்கு எதிராகவும், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பிலும் மதிமுகவின் மூத்த பொறுப்பாளர்கள் கணேசமூர்த்தியும், மல்லை சத்யாவும் நேரடியாகவே பங்காற்றினர், மல்லை சத்யா சிறையும் சென்றார். இவ்வகையில் அக்கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் போராட்ட களத்தில் எதிர்பார்ப்பின்றி பங்காற்றியவர்கள். தடா, பொடா எனும் அடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டவர்கள். மாவட்டம், பகுதி சார்ந்து மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவை எவற்றிற்காகவும் பிரதிபலனை மக்களிடத்தில் கோரியதில்லை இவர்கள்.
சாமானியர்களுக்காகவும், சமூக செயற்பாட்டாளர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து அவர்களுக்கு துணையாக நின்றார்கள். இன்றும் இம்மரபை தொடர்கிறார்கள். இந்த அரசியல் திராவிடர் இயக்க, பெரியாரிய அரசியலோடு நெருக்கமானது. இப்படி தனித்துவமான அரசியலை கொண்டதாக மதிமுகவையும், அதன் தொண்டர்களையும் வார்த்தார் வைகோ. இவ்வகை அரசியலை கையில் எடுக்காமல் போனால் மக்களிடம் வெற்றி பெற இயலாது எனும் நிலையிலேயே ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் இந்த அரசியல் பக்கம் நகர ஆரம்பித்துள்ளன. அவ்வகையில் பெரிய திராவிட கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்தது மதிமுக. வெற்றி, தோல்வி, பணபலம், அரசியல் அதிகாரம் என்பதைக் கடந்து எளிய மக்களுக்காக குரல் எழுப்ப தமிழகத்தின் அரசியல் தேவை மதிமுக’’ என தெரிவித்துள்ளார்.