கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ரூ.1.87 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு ரூ.1.87 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1,67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூலானது. அதைவிட ரூ.19,945 கூடுதலாக தற்போது வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது!
கடந்த ஏப்ரலில் சி.ஜி.எஸ்.டி-ஆக ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-ஆக ரூ.47,412 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி.-ஆக ரூ.89,158 கோடியும், செஸ் வரியாக ரூ.12,025 கோடியும் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருப்பதையே அதிகளவில் ஜி.எஸ்.டி வரி வசூல் காட்டுகிறது. இந்த நிலை தொடரும்பட்சத்தில், இன்னும் சில மாதங்களிலேயே ஜி.எஸ்.டி மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரியானது ரூ.2 லட்சம் கோடிக்கு மேலே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.