பெய்ஜிங்: மக்கள்தொகையை பெருக்க , திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்று கொள்ளலாம் என சீன அரசு புதிதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு 2023 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா தாண்டி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட 30 லட்சம் கூடுதலாக இருக்கும். எனவே தற்போதைய சூழலில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பட்டியலில் முதலிடத்தை இந்தியா பிடித்ததாக ஐநா கணித்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 142.86 கோடி எனவும் சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தோராயமாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பானது கடைசியால் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 2021 இல் எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டது.
எனவே இந்திய மக்கள் தொகையின் உறுதியான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தெரியவில்லை. எனவே பல்வேறு தரவுகளை கணக்கில் கொண்டு இந்த முடிவை ஐநா வெளியிட்டுள்ளது. அதே போல் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. சீனாவில் பல ஆண்டுகாலமாகவே மக்கள் தொகை வளர்ச்சியானது கணிசமாக குறைந்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனா கடந்த 20 ஆண்டுகளாக மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்காக கடுமையான விதிகளை பிறப்பித்தது. ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக் கொள்ள கூடாது என சட்டம் இயற்றிய சீனாவில் தற்போது இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சீன மக்கள் தொகையில் 60 வயதிற்கும் மேற்பட்டோர் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சீனாவில் 2035ஆம் ஆண்டில் வயதானவர்கள் மட்டும் அதிகளவில் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
3 குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அதிகபட்ச வரம்பை விட 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்க முடியும் என அறிவித்துள்ளது. இனி சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அது போல் இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. அரசு குழந்தை பெற்றுக் கொள்ள பல்வேறு சலுகைகளை அளித்தாலும் குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் சீனர்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. திருமணமாகாத பெண்கள் செயற்கை கருவூட்டல் மையங்களின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. வாடகைத் தாய் மூலமும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அறிவித்துள்ளது.