பாஜக Vs இந்து மக்கள் கட்சி… அடிதடி, சட்டைக்கிழிப்பு! – தாராபுரம் தகராறு… என்ன நடந்தது?

திருப்பூர் பா.ஜ.க-வின் தெற்கு மாவட்டத் தலைவராக இருப்பவர் தாராபுரத்தைச் சேர்ந்த மங்கலம் ரவி. அதேபோல, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக இருப்பவர் ஈஸ்வரன். பிரதமரின் மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சி பா.ஜ.க பிரசாரப் பிரிவின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் குண்டடம் ருத்ரகுமார் தலைமையில் தாராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அடிதடி

இது தொடர்பாக, தாராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரனிடம், பா.ஜ.க மாவட்டத் தலைவர் மங்களம் ரவி கேட்டிருக்கிறார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் சராமாரியாக தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் பா.ஜ.க-வின் மங்களம் ரவி, இந்து மக்கள் கட்சியின் ஈஸ்வரன், சங்கர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சியினர்

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், “பிரதமரின் மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, தாராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் மங்களம் ரவி உள்ளிட்டோர், எங்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு எங்களைத் தாக்கினர். தாராபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமலும், வரும் விநாயகர் சதூர்த்தியை நாங்கள் சிறப்பாக நடத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தத் தாக்குலில் மங்களம் ரவி ஈடுபட்டிருக்கிறார்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் மங்களம் ரவி பேசுகையில், “எனது தலைமையில் தாராபுரத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைந்து வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.க நிர்வாகி கொங்கு ரமேஷ், மாநில இளைஞரணிச் செயலாளர் யோகேஷ்வரன் ஆகியோர் என்னை நாள்தோறும் மிரட்டி வருகின்றனர். அவர்களின் ஆதரவாளராக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் செயல்படுகிறார்.

மங்களம் ரவி

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தவறாகப் பதிவிட்டிருந்தார். அது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, இந்து மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே என்னைத் தாக்கினர். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

பொதுவெளியில் இரு தரப்பினரும் ஆடையைக் கிழித்துக்கொண்டு சண்டை போட்டது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.