தமிழக அரசு அனைத்து பணிகளிலும் 28 சதவீதம் கமிஷன் வாங்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாக ஆளுநரிடம் நாங்கள் புகார் அளித்துள்ளோம். இது குறித்து மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளோம்.
பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பே இல்லை. கடந்த 27 ஆம் தேதி வாக்கில், விழுப்புரம் ஜானகிபுரத்தை சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, நான்கு சிறுவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். முதல்வர் மு க ஸ்டாலின் விழுப்புரத்தில் இருக்கும் போதே இந்த குற்றச்செயல் நடந்துள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கும் இடத்தில் இது போன்ற ஒரு குற்றச் செயல்கள் நடந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காதா?
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் தமிழக முதல்வர் எந்த எதிர் மறுப்பும் தெரிவிக்காததை பார்த்தால், இதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.
இந்த திமுக அரசு எந்தப் பணிகளில் பணிகளை எடுத்தாலும் அதில் 28% கமிஷன் வாங்குகிறது. இந்த விவகாரத்தில் கருணாநிதியை மிஞ்சியுள்ளார் ஸ்டாலின். இது குறித்து மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் புகார் அளித்திருக்கிறோம்” என்று சிவி சண்முகம் தெரிவித்தார்.