கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: பாஜக தேர்தல் அறிக்கை.. சும்மா அடிச்சு விடக்கூடாது.. சித்தராமையா பொளேர்.!

பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், கர்நாடகா முன்னாள் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல்

கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே மீதமுள்ளன. 224 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

200 யுனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளோமா முடித்து வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் என காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகள் கர்நாடக மக்களை கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்பில் காங்கிரஸ் 132 முதல் 140 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை

இந்தநிலையில் பாஜக சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கணேஷ் உத்சவ், யுகாதி மற்றும் தீபாவளி பண்டிகை வரும் மாதங்களில் ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து வார்டுகளிலும் குறைந்த விலையில் உணவு வழங்கும் வகையில் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு, சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் உடனே வெளியேற்றப்படுவர் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கர்நாடகா மக்கள் பாஜகவின் மீது அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. சிலிண்டர் விலையை மும்மடங்கு உயர்த்திவிட்டு, மூன்று சிலிண்டர் இலவசமாக வழங்குவதை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் குஜராத்தின் அமுல் மற்றும் மாநிலத்தின் நந்தினி பால் நிறுவன விவகாரம், இந்தி திணிப்பு, வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகத்தின் இடஒதுக்கீட்டு பிரச்சனை, 40 சதவிகித கமிஷன் உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

சித்தராமையா

இந்தநிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சித்தராமையை கடுமையாக விமர்சித்து உள்ளார். கர்நாடகா மாநிலம் கடாக்கில் முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘நாங்களும் நாளை காலை 9 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம். இன்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை என்பது போலியானது. நாங்கள் செயல்படுத்துவதை தான் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளாம்.

2018ம் ஆண்டு பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதா.? 2018ல் 600 வாக்குறுதிகளை பாஜக அளித்து, 55 நாட்களுக்குள் செயல்படுத்துவோம் என்று அறிவித்தது. அவை அனைத்து செயல்பாட்டுக்கு வந்ததா.? நாங்கள் கடந்த முறை 165 வாக்குறுதிகளை கொடுத்து, அதில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். இது காங்கிரஸ்-க்கும் பாஜகவிற்கு இடையேயான வேறுபாடு’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.