தானே: மகாராஷ்டிராவில் 2 மாடி கட்டிடம் நேற்றுமுன்தினம் திடீரென இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் உள்ளது வால்படா. இங்குள்ள வர்தமான் காம்பவுண்ட் பகுதியில் 2 மாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் கீழ் பகுதியில் கிடங்கு செயல்படுகிறது. இரண்டாவது மாடியில் 4 குடும்பத்தினர் வசித் தனர். கிடங்கிலும் தொழிலாளர்கள் சிலர் இருந்துள்ளனர். கட்டிடம் இடிந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் உடனடியாக பிவாண்டியில் உள்ள ஐஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 18 மணி நேரம் கழித்து சுனில் பிசா (38) என்பவரை மீட்புப் படையினர் நேற்று காலை 8 மணிக்கு மீட்டனர். அவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இவரையும் சேர்த்து காயம் அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.5 லட்சம் நிவாரணம்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உடனடியாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்த வர்களுக்கான மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொள் ளும் என்று அறிவித்தார்.
தாயை இழந்த சிறுவர்கள்
அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் ஷிண்டே சந்தித்து ஆறுதல் கூறினார். குறிப்பாக கட்டிடம் இடிந்ததில் தாயை இழந்த 2 சிறுவர்களை சந்தித்து ஷிண்டே ஆறுதல் கூறினார். மேலும், தானே மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள கட்டிடங்கள் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும், அப்படிப்பட்ட இடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் அசோக் ஷிங்காரேவுக்கு முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கட்டிட உரிமையாளர் இந்திரபால் பாட்டில் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறன்றனர். முதல்கட்ட விசாரணையில், கட்டிடம் கட்டி 10 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், கட்டிடத்தின் மாடியில் சமீபத்தில் புதிதாக செல்போன் டவர் நிறுவியுள்ளனர். அதன் எடை தாங்காமல் கட்டிடம் இடிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை.