‛சாமி' 20 ஆண்டுகள் : மறக்க முடியாத அனுபவம் என விக்ரம் நெகிழ்ச்சி
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த திரைப்படம் சாமி. த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசராவ், விஜய குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்குனர் கே. பாலச்சந்தரின் கவிதாலயா பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விக்ரமின் அசத்தலான போலீஸ் நடிப்பும், ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்தை மாபெரும் வெற்றி பெற செய்தது. மேலும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 20 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த படம் வெளிவந்த அன்றைய காலகட்டத்தில் அதுவரை வெளிவந்த அனைத்து தமிழ் படம் வசூலையும் முறியடித்து புது சாதனையை நிகழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து விக்ரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஒருச்சாமி, ரெண்டுச்சாமி, மூணுச்சாமி என்ற வசனத்துடன் வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார் கூடுதலாக ரொம்ப ஸ்பெஷல் ஆன படம் மறக்க முடியாத அனுபவம் #20YearsOfSaamy என்று பகிர்ந்துள்ளார்.