Ajith Birthday: தடைகளை தகர்த்தெறிந்த தலைமகன்… இளைஞர்களின் ஆதர்ச நாயகன்… அஜித் என்றொரு சகாப்தம்!

சென்னை: 1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அஜித்குமார்.

சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிகரான அஜித், இன்று கோடான கோடி இளைஞர்களின் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

சினிமாவில் நடிப்பு என்பதையும் கடந்து, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல் என ஆல் இன் ஆல் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருகிறார் அஜித்.

இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்தின் கேரியரின் ஸ்பெஷல் குறித்து தற்போது பார்க்கலாம்.

அஜித் என்றொரு சகாப்தம்: 1971 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த அஜித்குமாருக்கு, சிறுவயது முதல் சென்னையே அவரது சொந்த ஊராகிப் போனது. ஆரம்ப காலத்தில் பைக் மெக்கானிக்காகவும், அதில் ஏற்பட்ட தீராக் காதலால் பைக் ரேஸராகவும் வாழ்க்கையை தொடர்ந்தார். பைக் ரேஸில் கிடைத்த வெற்றித் தழும்புகள் அவரை மாடலிங் துறைக்கும், அடுத்தக் கட்டமாக சினிமா துறைக்கும் திசைத் திருப்பியது.

அந்தத் திருப்பம் அஜித்துக்கு மட்டும் மாற்றத்தை கொடுக்காமல், திரைத்துறையில் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கும் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. தனது 20வது வயதில் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமான அஜித், தமிழ் திரைத்துறையில் அமராவதி படத்தின் மூலம் அவதாரமெடுத்தார். ஆசை திரைப்படம் வெகுச் சிறப்பான அங்கீகாரத்தைக் கொடுத்தது.

 Ajith Birthday: Ajiths Exclusive filmography story for his 52nd Birthday

தொடர்ந்து வெளியான ‘காதல் கோட்டை’ அஜித் என்ற நடிகனை தங்கள் வீட்டுப் பிள்ளையாக நேசிக்கும் அளவிற்கு ஒவ்வொரு குடும்பங்களிலும் கொண்டுபோய்ச் சேர்த்தது. ‘காதல் மன்னன்’, ‘அவள் வருவாளா’, ‘அமர்க்களம்’, ‘முகவரி’, ‘வாலி’ போன்ற படங்கள் ஒட்டுமொத்த இளைஞர்களையும் வசியப்படுத்தியது. இன்னொரு பக்கம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ என கனிந்துருகும் காதல் படங்கள் கிறங்கடித்தன.

‘தீனா’ ‘ரெட்’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ போன்ற அதிரடி கதைக் களமாகட்டும் அஜித்தின் நேர்கொண்ட பார்வையில் எல்லாமே வரலாறாகிப் போனது. தமிழ் சினிமாவில் அஜித்தின் வெற்றிகளை விட தோல்வி படங்களின் எண்ணிக்கையே நெடியது. ஆனாலும் அவைகளை மிக திடமான மன உறுதியால் தகர்த்தெறிந்த வலிமை மிகுந்தவராக பயணித்துக் கொண்டிருப்பதே அஜித்தின் தனிச் சிறப்பு.

நடிப்பையும் தாண்டி ஃபார்முலா ஒன் ரேஸர், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநராகவும் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறார் அஜித். அதனால் தான் என்னவோ ரசிகர் மன்றங்கள் இல்லாத போதும், அஜித்தின் மீது பேரன்பு கொண்ட கோடான கோடி ரசிகர்கள், அவரை கொண்டாடித் தீர்க்கின்றனர். இளைஞர்களின் காதல் மன்னனாகவும், தமிழ் சினிமாவின் தல-யாகவும், என்றைக்கும் அல்டிமேட் ஸ்டாராகவும் சுடர்விடுகிறார்.

துயரங்கள் கோர்த்த தோல்விகள் பல துரத்தினாலும், அதில் சற்றும் துவண்டு விடாமல் தனது இலக்கை நோக்கிய துல்லியமான பயணத்தின் மூலம் பல வெற்றிகளைத் தனதாக்கியவர் அஜித்குமார். இளைஞர்களின் உத்வேகமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதோடு, பற்பல தலங்களிலும் பரிமளிக்கும் அஜித்தின் 52வது பிறந்தநாளில், மேலும் பல வெற்றிகளை தனதாக்கட்டும் என தமிழ் பிலிமிபீட் வாழ்த்தி மகிழ்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.