ஆஸ்துமாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு என்பதே 2023ம் ஆண்டு ஆஸ்துமா தினத்திற்கான உறுதிமொழி. ஆஸ்துமா என்பது மூச்சுகாற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாச குழாய்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசகுழாய்களில் சுருக்கம் மற்றும்
வீக்கம் ஏற்பட்டு மிக குறைவான அளவே நுரையீரலில் காற்று பரிமாற்றம் நடைபெறுகிறது. இது அதிகப்படியான சளியை உருவாக்கலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசு தான். கடந்த ஐந்தாண்டுளில் ஆஸ்துமா பாதிப்பு இருமடங்காக அதிகரித்து விட்டது. உலகம் முழுவதும் 30 கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 50 சதவீதம் கூடிக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சம். அதில் 6 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 11.6 சதவீதத்தினர்.
வைரஸ் தொற்று
குழந்தைப் பருவத்தில் கடுமையான சுவாச வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு ஆஸ்துமா உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். பலருக்கு நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும். இரவில் இருமல் வருதல், சிரிக்கும் போது அல்லது உடற்பயிற்சியின் போது மார்பு இறுக்கமாக இருத்தல், மூச்சு திணறல் இருந்தால் ஆஸ்துமா அறிகுறியாக சொல்லலாம். தீவிரமடைந்தால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். தலைசுற்றும். விரல்நகங்கள், உதடுகள் வெளிறி காணப்படும்.
‘ஸ்பைரோமீட்டர்’ கருவியால் நாம் எவ்வளவு மூச்சுகாற்றை வெளியிட முடியும் என அறிந்து ஆஸ்துமாவை கண்டறியலாம். 50 முதல் 80 சதவீதம் வரை இருந்தால் மத்திய நிலையில் ஆஸ்துமா உள்ளதென அர்த்தம். 50க்கும் கீழே இருந்தால் அதிகமாக உள்ளதென அர்த்தம். ‘பெனோ’ எனப்படும் நைட்ரிக் ஆக்சைடின் அளவீடு எளிய சுவாச பயிற்சி மூலம் செய்யப்படுகிறது.
இதில் வெளியேற்றப்படும் நைட்ரிக் ஆக்சைடின் அதிகரித்த அளவு ஒவ்வாமை சதவீதத்தை குறிக்கிறது. பொதுவாக எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதுசார்ந்த பல்வேறு பிரச்னைகளை கண்டறியலாம். எதனால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதை தடுக்க
வேண்டும். இது ஒரு தொடர் சிகிச்சை முறை. சற்று குணமடைந்தவுடன் ‘இன்ேஹலர்’ பயன்பாட்டை சிலர் கைவிடுகின்றனர். இது தவறான பழக்கமும் அல்ல.
என்ன செய்ய வேண்டும்
உடல் பருமனாக இருந்தால் எடையை குறைக்க வேண்டும். மன அமைதிக்கு மூச்சுபயிற்சி செய்ய வேண்டும். சிகரெட் புகைக்கக்கூடாது. புகைப்பவர்களின் அருகில் நிற்கக்கூடாது. சாப்பிடுவது, உறங்குவது போல நடைபயிற்சியும் மிகவும் அவசியம். உட்கார்ந்து பார்க்கும் வேலைகளை செய்வதால் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
ரத்தநாளங்களில் கொழுப்பு சேர்வதால் ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை வருகிறது. ஏசி அறையில் அதிக நேரம் வேலை செய்யும் போது உடலுக்கு தேவையான சூரியஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் டி 3 கிடைக்காமல் போகிறது. நடைபயிற்சி செய்வதால் சீரான ரத்தஓட்டம், மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். சுத்தமான சுகாதாரமான சுவாசத்தை உள்வாங்குவதால் நுரையீரலின் செயல்பாடு அதிகரிக்கும்.
நகரமயமாதலால் ஆஸ்துமா அதிகரித்து வருகிறது. ஒரு வீடு இருக்கும் இடத்தில் 50 பிளாட் வீடுகள் கட்டப்படும் போது சுற்றுச்சூழல் மாசு உள்கட்ட (இன்டோர்) மாசுவாக மாறி விடுகிறது. வீடுகளில் பயன்படுத்தும் எரிவாயு மாசு அதிகரிக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு மரம் வளர்க்க வேண்டும்.
அல்லது பூந்தொட்டிகளை பராமரிக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். சமையலறையில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும். இடநெருக்கடியாக இருந்தாலும் ஆஸ்துமா, சுவாச பிரச்னை வரலாம்.
‘பயாலஜிக் தெரபி’
சமீபத்தில் தோலுக்கு அடியில் மருந்து செலுத்தப்படும் ‘பயாலஜிக் தெரபி’ முறை வந்துள்ளது. 2 அல்லது 4 வாரத்திற்கு ஒருமுறை தோலின் அடிப்பகுதியில் இந்த ஊசியை செலுத்த வேண்டும். இந்த முறை நேரடியாக நோய் எதிர்ப்பு மண்டலத்தில் செயல்படும்.
சுவாசக்குழாய் வீக்கத்தை ஏற்படுத்தும் ரசாயனத்தை நேரடியாக இந்த மருந்து குறைத்து விடுகிறது. மூச்சுக்குழாய் வீக்கம் குறைப்பதால் ஆஸ்துமா பாதிப்பும் குறைகிறது.
முறையான உடற்பயிற்சி, நடைபயிற்சி, 7 அல்லது 8 மணி நேர துாக்கம், சத்தான உணவுகள், காய்கறி, பழங்கள் இவையே ஆஸ்துமா பிரச்னை இன்றி வாழும் அழகான வழிமுறை.- டாக்டர் மா.பழனியப்பன் நுரையீரல் சிறப்பு நிபுணர், மதுரை94425 24147
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement