நியூயார்க்: வருடா வருடம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. பல பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடா வருடம் மே 1ஆம் தேதி (இந்தியாவுக்கு மே 2) மெட் காலா எனும் ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் புதுமையான உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு அணிந்துவரும் உடைதான் சில நாட்களுக்கு ஹாட் டாபிக்காக இருக்கும்.
மெட் காலாவின் நோக்கம்: மெட் காலா நிகழ்ச்சியின் நோக்கம் நிதி திரட்டுவது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வோக் ஃபேஷன் பத்திரிகையின் ஆசிரியரான அன்னா விண்டோர் நடத்தும் இந்த நிகழ்ச்சியானது மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்காக நிதி திரட்டுவது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது இந்த ஆண்டு டிசைனர் கார்ல் லாகர்ஃபெல்ட்டிற்கு அஞ்சலி என்பதை கருப்பொருளாக கொண்டிருக்கிறது.
மெட் காலா 2023: வருடா வருடம் நடக்கும் இந்த நிகழ்ச்சியானது 2020ஆம் ஆண்டு மட்டும் கோவிட் காரணமாக நடத்தப்படவில்லை. இந்த வருடத்திற்கான மெட் காலா நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. இதில் ப்ரியங்கா சோப்ரா, முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகை ஆலியா பட் முதல்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற பிரபலங்கள்: அதேபோல், அமெரிக்க ஃபேஷன் மாடலான கார்லி கார்லஸ் கலந்துகொண்டார். அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தவிர்த்து கிம் கதார்ஷியன், செரீனா வில்லியம்ஸ், அமெரிக்காவை சேர்ந்த பாடகி டோஜா கேட் உள்ளிட்டோர் அசத்தலான உடையில் கலந்துகொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
டிக்கெட் இவ்வளவா?: முன்னதாக மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 30,000 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் 25 லட்சம்) இருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சியின் டிக்கெட் விலை 50,000 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 41 லட்சம் ரூபாய் ஆகும். இதன் காரணமாகவே சில பிரபலங்கள் இந்த ஆண்டு நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கருதப்படுகிறது.