சென்னை: தமிழகம் முழுவதும் சுட்டெரித்த கோடை வெயிலுக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. விடிய விடிய மழை பெய்ததால் சென்னை நகரம் குளிர்ந்து காணப்பட்டது.
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெப்பம் தகிக்கத் தொடங்கியது. அதுவும் இன்னும் சில நாட்களில் அக்னி நட்சத்திர காலம் துவங்க உள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று எண்ணிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்து வருகிறது.
அந்த வகையில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் இரவு லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. தூறல் மற்றும் மிதமான மழை என பெய்து கொண்டு இருந்தது. சென்னையில் வடசென்னை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் குடைகளை பிடித்தப்படி இயற்கை அழகுகளை ரசித்தனர். நெல்லை மாவட்டத்திலும் அடித்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. கோவை, சேலம், நீலகிரி மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.
கோடை மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை எண்ணூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ மழையும், கடலூரில் 9 செ.மீ மழையும் பதிவானது.
இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.