சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடித்து வரும் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் அதன் பக்கம் திருப்பி இருக்கிறது.
அஜித்தின் விடாமுயற்சி அறிவிப்பு வெளியாக உள்ளதால் முன்கூட்டியே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு அறிவித்ததை போலவே மே 1ம் தேதிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டனர்.
அரசியல்வாதியான வடிவேலு கையில் துப்பாக்கியும், உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியும் இருக்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என விவாதித்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாளில் டீ கிளாஸ்: பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் டீ கிளாஸில் இன்னமும் சாதிய பிற்போக்குத்தனமும் ஆதிக்கமும் இருப்பதை சுட்டிக் காட்டி சவுக்கடி கொடுத்திருந்தார்.
கதிர், ஆனந்தி நடித்த அந்த படம் ஏகப்பட்ட ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையே திரும்பி பார்க்க வைக்க மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்து விட்டார்.
தனுஷ் கையில் வீரவாள்: ஆனால், அடுத்த படத்திலேயே தனுஷின் கையில் வீர வாளை கொடுத்து கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் சாதிய அரசியலுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதே ஒரே வழி என்கிற ரேஞ்சுக்கு சென்று விட்டாரா? என விமர்சனங்கள் வெளியாகின.
இந்நிலையில், மாமன்னன் படத்திலும் கத்தி, துப்பாக்கி என ஆயுத அரசியலையே முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. ஆயுதம் ஏந்தினால் தான் ஹீரோக்கள் என்கிற பிம்பத்தை மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்களே என்கிற குற்றச்சாட்டு பெரிதாக கிளம்பி உள்ள நிலையில், மாமன்னன் படத்தில் வில்லன் யார் என்கிற கேள்விக்கும் சில விடைகள் கிடைத்துள்ளன.
வடிவேலு தான் வில்லனா?: மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலினும் வில்லனாக பகத் ஃபாசிலும் நடிக்கின்றனர் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் வடிவேலு மிரட்டலான நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாகவும், அரசியல்வாதியான வடிவேலு செய்யும் அட்டகாசங்களை மாற்ற வரும் மகனாகவே உதயநிதி ஸ்டாலின் இருப்பார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
படத்தின் போஸ்டர்களை எல்லாம் பார்த்தால் தேவர்மகன் போல இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் படமாக மாமன்னன் இருக்கும் என்கின்றனர். காமெடியாக ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த வடிவேலு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கிய நிலையில், முதல் முறையாக வில்லனாக நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.