கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது அதனை தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இங்கு ஆட்சி செய்து வரும் தேசிய கட்சியான பாஜக இந்த முறையும் வெற்றி கனியை பறிக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், தீவிர வலதுசாரி சிந்தனைகொண்ட பாஜக எம்எல்ஏ-க்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினரை நேரிடையாக எச்சரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று விஜயபுராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ பசவனகவுடா பாட்டீல் ‘ இந்தியாவைப் பற்றியோ, இந்து தர்மம், இந்துக்களைப் பற்றியோ பேசினால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக உ.பி. யோகி மாடலைப் போல சாலையில் என்கவுண்டர் செய்யப்படுவீர்கள் என்றும் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்’ என்றும் எச்சரித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருந்தபோதே அதிக் அகமது கொல்லப்பட்டதை பார்த்து இருப்பீர்கள் என்பதை சுட்டிக்காட்டிய பசவனகவுடா பாட்டீல் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால் உ.பி. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி முறையை கர்நாடகாவில் அமல்படுத்துவோம் என்றும் அவர் கூறினார். தேர்தலுக்கு முன்பே ஜனநாயகத்துக்கு எதிராக சிறுபான்மையினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாக்கு கேட்கும் அளவிற்கு சாதகமான சூழல் கர்நாடகாவில் நிலவி வருகிறது. இதற்காகத்தான் தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் அதிகமாக உள்ளது. இந்துக்களை பற்றி பேசினால் உபி மாடலை போல நடுரோட்டில் சுட்டு கொல்லப்படுவீர்கள் என்று பாஜகவினர் சொல்லும்போது உ.பி.யில் உள்ள சிறுபான்மையினரின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
கர்நாடகாவில் தேர்தல் மட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளும் சூடு பிடித்து வருகிறது. முன்னதாக, நடந்த பொதுக்கூட்டத்தில் மூத்த பாஜக தலைவர் கே.எஸ் ஈஸ்வரப்பா பேசியபோது, முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது ஒலிபெருக்கியில் வரும் சத்தம் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தொந்தரவாக உள்ளது. அல்லாவுக்கு காது கேட்கும். ஆனால், முஸ்லிம்கள் பல்வேறு மைக்குகளை பயன்படுத்தி அல்லாவை அழைக்கின்றனர். அது அல்லாவை அவமதிக்கும் செயல் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.